யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மந்துவில் பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆடு மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட நிலையில் திருடப்பட்டிருந்தது. குட்டி ஈன்று இரண்டு மாதங்களான நிலையில் ஆடு திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டிருந்தது.

பின்னர், ஆடு விற்பனைக்கென பேஸ்புக்கில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக அறிந்து, அந்த விளம்பரத்தை பார்த்தார். அது தனது ஆடுதான் என்பதை அறிந்து, அந்த முகவரிக்கே நேரில் சென்று, தனது ஆடுதான் என்பதை உறுதிசெய்தார்.

இதையடுத்து கொடிகாமம் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். இதனடிப்படையில், விளம்பரத்தை செய்தவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

கைதடியிலுள்ள பெண்ணொருவரிடம் ஆட்டை கொள்வனவு செய்ததாக அவர் கூறினார். கைதடி பெண்ணையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.

ஆட்டை கொள்வனவு செய்து முகப்புத்தகத்தில் விளம்பரப்படுத்திய இருவர் நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், ஆட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.