66ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து உருவான மகாநடிகை படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அவர் அளித்த பேட்டியில்:

தேசிய விருது அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பத்துடன் கேரளாவில் இருக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததாக சொன்னார்கள். இந்த நேரத்தில் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி. என்னால் சாவித்ரி கேரக்டரில் நடிக்க முடியுமா? என பயந்தேன். சவாலாக இருந்தது, ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.

தேசிய விருது மூலம் என் பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளேன் என நம்புகிறேன். வரும் காலங்களில் நல்ல கதையுள்ள படங்களில் நடிப்பேன். அடுத்தப்படியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் புதியவர் ஈஸ்வர் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். தேசிய விருது கிடைக்க காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் இந்தநேரத்தில் நன்றி.

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.