தௌஹீத் ஜமாத்தின் விருந்தில் தமிழ் அரசியல்வாதிகள்?

உலகப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பிய்த்தெறியப்பட்டிருக்கிறது இலங்கைத்தீவு. இதுவரை 359 உயிர்கள் பலியாகிவிட்டன. எண்ணிக்கை உயரக்கூடும் என மருத்துவமனை வட்டாரச் செய்திகள் பீதியுற வைக்கின்றன.

பத்துப் பேர் கூடி ‘கடவுளே’ என்று கதறியழக் கூட அஞ்சும் நிலையில் மக்கள் இருக்கின்றார்கள். நடந்த அவலம் தொடர்ந்து விடக்கூடாதென்று, உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் எமது அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் ‘எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என்ற வகையில், தமது அரசியல் நலன்களுக்கு நடந்த சம்பவங்களை பயன்படுத்துகின்றனரோ என்ற வேதனை மக்களிடம் உருவாகிவருகிறது. குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கருதப்படும் அடிப்படைவாத அமைப்புடன் எதிர்தரப்பு அரசியல்வாதிகளைக் கோர்த்து விட்டுப் பயனடைய சில அரசியல்வாதிகள் எத்தனிக்கின்றனர் என்றும் ,இது சில சமயங்களில் சொல்பவர்களுக்கே  ‘பூமராங்’ ஆக திருப்பித் தாக்கக்கூடும் என்றும் அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பார்த்துச் சிரித்தால் பத்து வாக்குகள் கிடைக்குமென்றால் ,மின்சாரக் கம்பத்தைப் பார்த்து சிரிப்பை உதிர்த்து ,பக்கத்தில் நின்று படமெடுப்பது பொதுவாகவே அரசியல்வாதிகளின் குணம் என்று சுட்டிக்காட்டும் அவதானிகள்,குண்டு வைப்பதே ஜமாத்தின் திட்டம் என்பது தெரிந்திருந்தால் அரசியல்வாதிகள் அந்தப்பக்கம் தலை வைத்துப் படுத்திருப்பார்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

பெரும்பாலும் தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே. அதனால் சில தமிழரசியல்வாதிகள் தௌஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய சகலரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று துணிச்சலாகக் குரல் எழுப்புகின்றனர்.


* தொடர் குண்டு வெடிப்பிற்கும் ரிஷாத்துக்கும் தொடர்பு
*ஜமாத் அமைப்புடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு தொடர்பு-சுமந்திரன்

அன்றைய அல்கொய்தா,ஹமாஸ் முதல் இன்றைய ஐ.எஸ். வரை பொது பழக்கங்கள் இருக்கின்றன. ”அமெரிக்காவில் காலூன்ற அல்கொய்தா பின்பற்றிய வழிகளில் பெரும் விருந்துகள் முக்கியமானவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வெளியிலிருந்து பார்க்கும்போது சாதாரண விருந்தாக தோன்றும் இவற்றில், இனமத வேறுபாடின்றி அதிகாரிகள்,அரசியல்வாதிகளை கலந்து கொள்ளவைத்து, அந்தச் சமயங்களில் அவர்களை தமது வசப்படுத்தும் சாதுரியம் அந்த அமைப்புகளின் வழக்கம்” என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் அடிப்படையில் பார்த்தால் தமது இஸ்லாமிய நண்பர்களின் அழைப்பின் பேரில் தமிழ் அரசியல்வாதிகள் எவரேனும் புத்தளம் போன்ற நகரங்களில் இடம்பெற்ற விருந்துகளில் கலந்து கொண்டிருந்தால்,’சகலரையும் விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை, பூமராங்காக, கோருபவர்களையே திருப்பித் தாக்கக்கூடும் என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது ஆய்வுக்குரியதே.

எது எப்படியோ குடும்பப் பொருளாதாரத்திலும் படிப்பிலும் உயர்ந்திருந்த சில இலங்கையர்கள், தமது சொந்த நாட்டில் – 11 மாதப் பிஞ்சுக் குழந்த உட்பட – உடன்பிறவாச் சகோதரர்களை ,தமது உயிரையும் மாய்த்து கொன்று குவித்துள்ளார்கள்.3 தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரினால் சிதிலமான பின்னர் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதில் என்ன பாடம் கற்றும் பயனின்றி, இன்னொரு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து கிளம்பிய கோபத்தால் இலங்கைமாதா குற்றுயிராக்கப்பட்டிருக்கிறாள்.

தற்கொலைத்தாக்குதலில் ஈடுபட்டவர் , அவரின் தந்தை சிறந்த ஏற்றுமதிக்கான கௌரவத்தை அமைச்சரிடம் பெற்ற வேளை.

இப்போதாவது இன மத குரோதங்களை தூண்டி விட்டுக் குளிர்காயும் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில், நடந்த கொடூரத்துக்கான பொறுப்பை அடுத்தவர் மீது சுமத்தி அரசியல் இலாபம் பெற முனையும் அரசியல்வாதிகள் கொள்ளி வைக்கிறார்களே என்பதுதான் இலங்கைக் குடிமக்களின் ஆதங்கம்.

வெடித்த குண்டுகளுக்குப் பலியானோர் ,இப்போது வேண்டுமானால் சாதாரண மக்களாக இருக்கலாம். ஆனால் இதில் பயனடையத் துடிப்போரையே ,அது பலி எடுக்கும் என்பதே கடந்த காலம் கற்றுத் தந்த பாடம்.

எமது அரசியல்வாதிகளுக்கு இது புரிந்து, இனமத பேதமற்ற சகலரும் சமமாக வாழும் சுபீட்சமான இலங்கை மலர வழி செய்வார்களா…?