யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலைக்காக பல்வேறு நடவடிக்கைளை தான் எடுத்திருந்த நிலையில் விடுதலையாகிய மாணவர்களில் ஒருவரேனும் நன்றி கூடத் தெரிவிக்கவில்லை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளையடுத்து நாட்டின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கமைய பல்கலைக்கழகத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் நிமித்தம் பல்கலைக்ழக மாணவர்கள் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட் நிலையில் மாணவர்களை விடுவிப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். அதிலும் தற்பொதைய அவசரகாலச் சட்ட நிலைமையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள் மாணவர்கள் என்பதால் அவர்களை விடுவிப்பதற்கு வேண்டிய விடயங்களை ஆலோசனையாக ஆளுநர் என்ற ரீதியில் வழங்கியிருந்தேன்.

இதற்கமைய குறைந்தளவிலான அடிப்படை நீதித்துறைக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு அரசியல்வாதி அல்ல. அறிக்கைகளை விட்டுவிட்டு காரியங்களைச் செய்ய வேண்டியதில்லை. என்னால் செய்யக் கூடியதை செய்து வருகின்றேன். அதனையே மாணவர்கள் விடுதலையிலும் நான் செய்திருக்கின்றேன். அதற்கமைய தற்போது மாணவர்களும் வெளியே வந்திருக்கின்றனர்.

குறிப்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அந்த மாணவர்களின் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். இதன் போது நான் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். இவ்வாறு மாணவர்கள் விடுதலையில் பலதையும் செய்திருக்கின்றோம்.

ஆனாலும் மனிதன் என்ற ரீதியில் குறையாக உள்ளது. அதாவது விடுதலையாகிய அந்த இரண்டு பேரில் ஒருவராது தொலைபேசி மூலமாகவேனும் நன்றி கூட எங்களுக்கு சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் நன்றி சொல்வார்கள் என்று நான் எதிர்பார்த்து இருக்கவில்லை. அந்த எதிர்பார்ப்பில் இதனை நான் இங்கு தற்போதும் சொல்லவில்லை. ஆனால் சொல்லியிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். ஏனெனில் எனக்குப் பின்னால் சேவை செய்த பல பேர் இருக்கின்றனர். ஆகையினால் அவர்களுக்கு இதுவொரு ஆறுதலாக இருந்திருக்கும் என்றார்.