ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவில் நாடாளுமன்றைக் கலைக்குமாறு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நாளைமறுதினம் 8ஆம் திகதிவரை உயர் நீதிமன்ற அமர்வு இன்று நீடித்தது.

நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விவாதம் பிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்றது.

எதிர்மனுதாரர்கள் மற்றும் இடைபுகு மனுதாரர்களின் விவாதம் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நிறைவடையவில்லை. அதனால் நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளதால் இந்த ஒருநாள் நீடிப்பை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் விசாரிக்கப்படுகின்றன. நாளைமறுதினம் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.