நாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி அம்பாறை அரச அதிபர் விடுத்த கோரிக்கையை போராட்டக்காரர்கள் நிராகரித்துள்ளனர்.

ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் இந்துமத குரு, கல்முனை நகரசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் இன்று இரண்டாம் நாளாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை போராட்ட இடத்திற்கு சென்ற அம்பாறை அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க, போராட்டத்தை கைவிடும்படி போராட்டக்காரர்களை கேட்டுக்கொண்டார்.

நாளை காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், போராட்டத்தை கைவிடும்படி அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.

எனினும், போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அப்படியொரு பேச்சு செய்வதென்றால், தமது போராட்ட இடத்திலேயே நடத்தும்படி தெரிவித்தனர்.

அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் நாளை மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும், அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால், நாளை மதியம் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தி அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.