பாகிஸ்தானில் உள்ள சந்தையில் இன்று காலை ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரான குவெட்டாவில் ஹசார்கஞ்சி எனும் பகுதி உள்ளது. இங்கு ஹசாரா இனமக்கள் அதிக அளவில் உள்ளனர்.

இங்குள்ள சந்தையில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

குண்டுவெடிப்பில் அங்கிருந்த பல கடைகள், கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நொருங்கின.

இச்சம்பவத்தில் 16 பேர் உடல்சிதறிப் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் இராணுவத்தினரும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.