இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஐதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடித்துள்ள லூசிபர் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கி உள்ளார். மொழி, ராவணா உள்பட பல படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். இந்த படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

அரசியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28-ந்தேதியன்று வெளியாக உள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.