பிள்ளையான் உள்ளிட்ட 6 பேர் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்தோம் என முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகள் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

வழக்கின் எதிரிகளில் ஒருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடையவர் என்று எதிரிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பிள்ளையான் உள்ளிட்ட 6 எதிரிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டு வழக்கை மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுமதியளித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன், வழக்கை பெப்ரவரி 21, 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கஜன் மாமா என அழைக்கப்படும் ரெங்கசாமி கனகநாயகம் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராணுவ புலனாய்வில் பணியாற்றிய மீராலெப்பை கலீல் உள்ளிட்ட ஆறு பேர் மீது 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்தீன் முன்னிலையில்
இன்று (9) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

எதிரிகள் ஆறு பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

முதலாவது மற்றும் இரண்டாவது எதிரிகளால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய நால்வருடன் இணைந்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரிகளால் சுயமாக வழங்கப்பட்டது என ஏற்றுக்கொண்ட
மட்டக்களப்பு மேல் நீதிமன்றம், 6 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலதிக
விளக்கத்தை முன்னெடுக்குமாறு வழக்குத் தொடுனரான சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பணித்தது.

மூத்த அரச தரப்பு சட்டவாதி மாதவ தென்னக்கோன், அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் ஆகியோர் முன்னிலையாகினர். எதிரிகள் 6 பேர் சார்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா முன்னிலையானார்.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு நத்தார் தின நள்ளிரவு
ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.