அரசியல் கொந்தளிப்பின்  மத்தியில் சிறிலங்காவில் மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றி விட்டார் என்றவுடன், முதலில் வாழ்த்து தெரிவித்த தலைவராக, சீன தலைவர் ஷி ஜின்பிங் இடம் பிடித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பிரதமராக பதவி வகித்து  வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதவிநீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக முன்னைநாள் அதிபர், மகிந்த ராஜபக்ச  நியமிக்கப்பட்டிருந்தார்.  இதனை தொடர்ந்து சிறிலங்காவின் அரசியலில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது

அரசமரம் போல் இருக்க வேண்டும் என்பதற்காக, யாப்புகளாலும் அரசியல் திருத்த சட்டங்கள் என்ற விழுதுகளாலும், பௌத்த சிங்களத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சிறிலங்காவின் அரசியல் இயந்திரம், இன்று பிளந்து போய் கிடக்கிறது.  மகிந்த,  ரணில்,   இருதரப்புக்கள் சிறிலங்காவின் தலைமைத்துவ அதிகாரம் தமது கை களிலேயே உள்ளது என்று உரிமை கோரி வருகின்றனர்.

சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் கொந்தளிப்பு சர்வதேச ஊடகங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சீன -இந்திய பத்திரிகைகள் தமது முக்கிய கவனத்தை கொண்டுள்ளன.   இந்த நிலையில் சர்வதேச நிலையிலிருந்து ஒரு பார்வை இங்கே வைக்கப்படுகிறது.

பிராந்திய வல்லரசுகளின் கைகள் ஒங்கி இருக்கும் காலம் இது. ஆசியாவில் அரசியல் முன்னுரிமை பெறும் பொருட்டு மூன்று பிரதான வல்லரசுகள் போட்டியிடுகின்றன.  நான்காவதாக ரஷ்யாவும் தனது கிழக்கு கரை குறித்த அதிக கரிசனை கொண்டுள்ளது. 

ஜப்பானிய -இந்திய அரசுககள் வடக்கு அத்திலாந்திக்கரை தேசங்களின்  தாராள ஜனநாயகத்தின் பேரால் ஒன்றுடன் ஒன்று ஒத்து செயற்படுகின்றன. கீழைதேய வர்த்தக கம்யூனிச கொள்கை கொண்ட  சீனாவை, தமது கூட்டு நடவடிக்கைகள் மூலம் கொள்ளடக்கும் தன்மையை தமது மூலோபாயமாக  கொண்டிருக்கின்றன.

சிறிலங்கா  போன்ற  சிறிய நாடுகள் வல்லரசுகளின் போட்டியின் மத்தியில் தமது நலன்களை முன்னிறுத்திக் கொள்ளும் கொள்கைகளை தம்மகத்தே கொண்டிருக்கின்றன. சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் நாட்டின்  வெளியுறவு கொள்கையை பொறுத்தவரையில் தமது சார்புதன்மையை வெளிப்படையாக காட்டி கொள்ளாத ஒரு போக்கை கொண்டிருக்கின்றன.

இருந்த போதிலும் மௌனக் கொள்கை மற்றும்  செயல் அளவில் ஐக்கிய தேசிய கட்சி வடக்கு அத்திலாந்திக்கரை தேசங்களின் சார்புத்தன்மையை அதிகம் கொண்டிருந்தது.

அதேவேளை சுதந்திர கட்சி அதிகம் சீன சார்புத்தன்மையை ஒத்த உள்நாட்டு கொள்கையை, தனது மௌனமான வெளியுறவு விவகாரங்களில்  சீன சார்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் இருந்து வருகின்றது.

இருந்த போதிலும் தமது நடை முறை ஆட்சி நலன்களின் அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் சிறிலங்கா சார்பாக, எந்த  வல்லரசுகளுடனும் பேரம் பேசும் சக்திகளாக இருந்து வருகின்றன.

அணிசேரா அமைப்பு காலாவதியாகி விட்ட போதிலும், தாம் அணிசேரா தன்மையை சர்வதேச உறவு கொள்கையில் கடைப்பிடித்து வரவேண்டும்  என்றே கொழும்பு பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் விதைந்துரைத்தும் வந்திருக்கின்றன.

பிராந்திய வல்லரசு நாடுகளைப் பொறுத்தவரையில் அவை தமது நலன்களை மையமாக கொண்டு சிறிலங்காவில்  எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அக்கட்சியின் செல்வாக்கை தம் வசம் வைத்திருக்கும் முயற்சியிலேயே இருந்து வந்திருக்கின்றன.

சிறிலங்காவின் அயல் தீவான மாலைதீவில் அண்மையில் இடம் பெற்ற அரசியல் கொந்தளிப்பின் பின்னர், ஜனாதிபதி யமீன் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உருவானது. யமீன் சீன சார்பாளராகவும் பெருமளவிலான  இந்திய எதிர்ப்பாளராகவும் இருந்து வந்திருந்தார்.

இதனால் இந்திய மேலைத்தேய நாடுகளின் நேரடி அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. மாலைதீவு இந்து சமுத்திரப் பிராந்திய தீவு என்பதன் பலனாக இந்தியா மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது.

இதனால் மாலைதீவில் சீனா தோல்வி காண வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியாவின் புறநிலங்களில் ஒன்று போன்ற வகையில், சிறிலங்கா மிக அருகாமையில் அமைந்துள்ள ஒரு இறையாண்மை மிக்க தீவு ஆகும் மேலும் சிறிலங்காவின் ஆட்சி தலைவர்களின் குணாதிசயங்களின் பிரகாரம் எந்த நாட்டுடனும் தமது எதிர்ப்பை அரசியலில் காட்டிக் கொள்ளாத போக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு  புதுடெல்லி புரிந்துணர்வு கொள்கையா (New Delhi consensus)  அல்லது பீஜீங் புரிந்துணர்வு கொள்கையா (Beijing consensus)  என இரண்டில் ஒன்று என்ற  நிலையை நோக்கி சிறிலங்காவை  கொண்டு செல்லும் பாணியில் அமைந்திருக்கிறது.

South China Morning Post பத்திரிகை தனது ஒவ்வொரு  கட்டுரைகளிலும் சிறிலங்காவுக்கு சீனா செய்த உதவிகள் யாவற்றையும் திரும்ப த்திரும்ப எடுத்து கூறி வருகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்பு நாட்டை கட்டி எழுப்பி பில்லியன் கணக்கான பணத்தை சீனா வழங்கி உள்ளது. கொழும்பு துறை முக நகர கட்டுமானத்திற்கு சீனா 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது .

இவ்வருட ம் ஜூலை மாதத்தில் கூட சீன தலைவர் ஷி ஜின் பிங் 287 மில்லியன் டொலர்களை உதவித்தெகையாக கொடுத்தள்ளார்  என பல்வேறு வகையில் சிறிலங்கா, சீனாவுக்கு கடமைப்பாடு உடையது என்ற வகையில் அழுத்தமாக கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தியப் பத்திரிகைகளை பொறுத்தவரை அரசியல் சட்ட விதிமுறைகள் குறித்த பேச்சு அதிகம் உள்ளது. நாட்டின் அரசியல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காது போய்விடும் நிலை ஏற்பட்டால், மேலைத்தேய போக்கு வலுவிழந்த நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் சிறிலங்கா தமது செல்வாக்கிலிருந்து தூர  விலகி சென்று விடும் என்பது இந்திய பார்வையாக உள்ளது.

சீன- இந்திய இராஜதந்திரிகள்  நாம் உள்நாட்டு அரசியலில் தலையிடமாட்டோம் ,ஆனால் உன்னிப்பாக கவனிப்போம் என்று வாக்குறுதி கூறி உள்ளனர்.  இது இருபகுதியும் இந்த தீவின் மீது தாம் காட்டும்  முக்கியத்துவத்தை  வெளிப்படுத்தி உள்ளனர்.

தம்மால் கட்டி அமைக்கப்பட்டுள்ள கடல் சார் பாதுகாப்பு குறித்த மூலோபாய பிடியை இருதரப்பும் முக்கியமாக கருதுகின்றன. இந்த ஆட்சி மாற்றத்தில் போட்டி போடும் அரசியல் தலைவர்கள் யாராவது தமது நலன் எல்லைகளின் சிவப்புக் கோட்டை தாண்டுகின்றார்களா என்பது தான் இவர்களது பார்வை.

அதேவேளை  இந்த ஆட்சிகவிழ்ப்பு நிகழ்வு கூட, அந்த சிவப்புக் கோட்டின் எல்லையில் வைத்து தான் நிகழ்திருக்கிறது என்பது இங்கே முக்கியமானதாகும்.

300 மில்லியன் அமெரிக்க டொலர் வீட்டுத்திட்டம் சீன கைகளில் இருந்து இந்திய கைகளுக்கு மாற்றம் பெற்றது.

அம்பாந்தோட்டையிலே சீன கப்பற்தளத்திற்கு அருகே இந்திய செல்வாக்கிற்கு அதிகம் இடம்கொடுக்கப்பட்டது. திருகோணமலை துறைமுகம் ஜப்பானிய இந்திய நாட்டங்களுக்கு உள்ளானது போன்றன சீன வலுவிழப்பு நடவடிக்கைகளாக சீனதரப்பால் பார்க்கப்பட்டது.

இந்த நிலையே அரசியல் சட்ட வரைமுறைகளுக்கு அப்பால் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சியை கைப்பற்றும் நிலையை ஏற்படுத்தியது.

ஆக பிராந்திய மற்றும் பூகோள வல்லரசுகளின் நலன்களின் முன்னால் எந்த சிறிய நாட்டு அரசியல் சட்டங்களும்  யாப்புகளும் வெறும் குப்பை கூளங்களே.

Leave a Reply

Your email address will not be published.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது