பேச்சுவார்த்தையில் உடன்பாடு? – மீண்டும் தொடங்குமா இந்தியன் 2 படப்பிடிப்பு?

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவி வரும் நிலையில், படம் மீண்டும் துவங்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கிய நிலையில் படத்தில் இடம்பெறும் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் இயக்குநர் ‌ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டுவிட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன் 2 படத்தை தயாரிக்க ‌ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது ‌ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகா நிறுவனமே ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.