கடந்த சனிக்கிழமை தனது 19 வயது மகளைப்போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்ற கைதி சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ மாகாணத்தில் உள்ள அங்கிற டோஸ் ரெய்ஸ் நகரை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவர் கிளாவினா டா சில்வா. இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் 73 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சனிக்கிழமை சில்வா தனது 19 வயது மகளைப்போல் வேடமிட்டு சிறையில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் சிறைக்காவலர்களிடம் சிக்கினார். இதையடுத்து, அவர் மீண்டும் தப்பிக்க முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு வாய்ந்த தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், சில்வா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் எனச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சிறைக்காவலர்கள் சில்வாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறையில் தப்பிக்க முயன்றபோது மாட்டிக்கொண்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.