மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நேற்று மாலை தொடக்கம் பொலிஸாரும் இராணுவத்தினரும் வட்டக்கச்சியில் உள்ள முன்னாள் போராளியின் வீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தேடுதல் நடத்தியதால் ஏற்பட்ட அச்சத்தையடுத்தே முன்னாள் போராளி
கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் என்று அறியமுடிகிறது.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தனை (வயது -48) நீதிமன்றில் முற்படுத்தாது ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராகி
வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

‘தானாக குற்றத்தை ஒப்புக்கொண்டு சந்தேகநபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணைகளின் பின்னரே தகவல் வெளியிட முடியும். சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்’ என்று கிளிநொச்சி பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.

எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று மாலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

காலியை சேர்ந்த நிரோஷன் இந்திக, கல்முனையை சேர்ந்த கணேஸ் தினேஸ் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர். அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு அவர்களிடமிருந்த இரண்டு- ரி 56 துப்பாக்கிகளையும் பறித்து சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் இரண்டும் மர்ம நபர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து நேற்றுமாலை தொடக்கம் கிளிநொச்சி – வட்டக்கட்சிப் பகுதியிலுள்ள முன்னாள் போராளியின் வீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் போராளியின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று அவரின் உறவினர்களிடம் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் நடவடிக்கையில் அச்சம் கொண்ட முன்னாள் போராளி இன்று காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவர் கிளிநொச்சிப் பொலிஸார் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

அதனால் சந்தேகநபரை கொழும்புக்கு அழைத்துச் சென்று 7 நாள்களுக்கு தடுத்துவைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று அறியமுடிகிறது.