குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 69 தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பெண்களுக்கு சத்திரசிகிச்சை ஊடான கருத்தடை இரகசியமாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும், அளவுக்கதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார் என்ற சந்தேகத்திலும், குருணாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஷாபி சிகாப்தீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் தற்போது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இவர், 8000இற்கும் அதிகமான சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து சிங்கள நாளிதழ் செய்திவெளியிட்டது.

இந்தநிலையில், மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை சுமார் ஆயிரம் பெண்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

மருத்துவரால் மகப்பேற்றின் போது, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்று அவர்களில் பலர் கூறியுள்ளனர்.

இதனால், மருத்துவர் ஷாபி சிகாப்தீன் மகப்பேற்று அறுவைச் சிகிச்சையின் போது, பெண்களின் கருவுறும் தன்மையை இழக்கச் செய்தாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் குற்ற விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுகாதார அமைச்சும் சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அமைத்து விசாரித்து வருகிறது.

குருணாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் 70 தாதிய உத்தியோகத்தர்கள் மருத்துவர் ஷாபி சிகாப்தீனுடன் பணியாற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 69 பேரிடம் குற்ற விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஒரே ஒரு தாதிய உத்தியோகத்தரிடம் மட்டும் வாக்குமூலம் பெறப்படவில்லை. அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.