மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்களை கொண்டு வருவதில் இழுபறி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு சிறிலங்கா படையினரின் சடலங்களையும் கொழும்புக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார ஆகிய இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும், கடந்த மாதம் 25ஆம் நாள் மாலியின் மத்திய பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.

இவர்களின் சடலங்கள் ஐ.நாவின் ஏற்பாட்டில் தனி விமானம் மூலம், நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், திட்டமிட்டபடி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சடலங்களை ஏற்றிய விமானம் வந்து சேரவில்லை. விமானத்தை ஒழுங்குபடுத்துவதில் ஏற்பட்ட இழுபறியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இராணுவத்தினரின் சடலங்களுடன் விமானம் வந்து சேரும் என்று சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது