மாவா போதைப்பொருள் வியாபாரி யாழில் கைது : நீதிமன்றில் தண்டனை பெற்று வந்த அன்றே மீண்டும் சிக்கினார்

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்தியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் நேற்றுபுதன்கிழமை இரவு சந்தேகநபர் சுமார் 16 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

‘யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் தனது உடமையில் மாவா போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) புதன்கிழமை குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வீடு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது விற்பனைக்குத் தயாராகப் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்’ என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.