மிருசுவிலில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவரின் கைப்பையில் கஞ்சா

கடந்த 5ஆம் திகதி ஏ9 வீதி, மிருசுவில் பகுதியில் டிப்பர் வாகனமொன்றை நிறுத்துமாறு போக்குவரத்து பொலிசார் சமிக்ஞை செய்தனர். டிப்பர் வாகனத்தை வீதியோரமாக நிறுத்திய சாரதி, வாகனத்திற்குரிய ஆவணங்களுடன் பொலிசாரை நோக்கி சென்றார். அப்போது, அதே மார்க்கத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த பெண்ணொருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதினார்.

மோட்டார்சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த தாயும் மகனும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கைப்பையை சோதனை செய்தபோது, மின்சார பாவனை கட்டண சிட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், 64 கிராம் 120 மில்லிகிராம் கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.அறிக்கையை பார்வையிட்ட நீதிமன்ற பதில் நீதிவான் செ.கணபதிப்பிள்ளை, விபத்து தொடர்பாகவும், கஞ்சாவை மறைத்தது வைத்திருந்தமை தொடர்பாகவும் தனித்தனி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்