மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன்மூலம் மலையகத் தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெறும் முதலாவது நீதியரசர் என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (09) முற்பகல் நீதியரசர்கள் மூவரும் பதவியேற்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரப்பிள்ளை துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஈ.ஏ.ஜீ.ஆர்.அமரசேகர ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக புதிதாக பதவியேற்றனர்.

மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கே.பி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
நீதியரசர் எஸ்.துரைராஜா யார்?

புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற துரைராஜா, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியாக 1988ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட சிதம்பரம்பிள்ளை துரைராஜா, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக தொழில்நுட்ப டிப்ளோமா பட்டத்தையும், மோல்டாவில் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான சர்வதேச டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டார்.

பிஜி குடியரசில் பரிஸ்டராகவும் சொலிஸிட்டராகவும் பணியாற்றிய இவர், 1989ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். 2000 ஆம் ஆண்டு வரை அரச சட்டத்தரணியாகவும், 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2007ஆம் ஆண்டு வரை மூத்த அரச சட்டத்தரணியாகவும் செயற்பட்டார்.

2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை பிரதி சொலிஸ்டர் ஜெனரலாகவும், 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் வரை மேலதிக சொலிஸ்டர் ஜெனரலாகவும் செயற்பட்டு வந்தார். அத்துடன், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், சட்டக்கல்லூரி, கொழும்பு சட்ட பீடம், திறந்த பல்கலைக்கழகம், பொலிஸ் பயிற்சிக் கல்லௗரி, மதுவரித் திணைக்களம் ஆகியவற்றில் சட்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

வழக்குத் தொடுநராக 27 வருட சேவைக்காலத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை அரச சார்பில் முன்னெடுத்து சிறப்பாக வாதாடியதுடன் விட்டுக்கொடுக்காத இறுக்கமான வழக்குத் தொடுநராகவும் சேவையாற்றியுள்ளார்.இவர் முன்னிலையாகிய வழக்குகளில் இலங்கை வங்கி தானியங்கி கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பந்தமான வழக்கு, பலப்பிட்டிய முக்கொலை வழக்கு, மக்கள் வங்கியில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடி சம்பந்தமான வழக்கு மற்றும் 48 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கு போன்றவற்றை குறிப்பிட முடியும்.

2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் 14ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரப்பிள்ளை துரைராஜா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டார்

இதன்மூலம் முதலாவது மலையகத் தமிழர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த அவர், இன்று உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி உயர்வு பெற்றார்.