‘முதல்முறையாக சந்தானம் இல்லாமல் படம் பண்ணுகிறேன்’ – இயக்குநர் ராஜேஷ்

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. நேற்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குநர் ராஜேஷ் பேசியதாவது,

எனக்கு ரொம்ப எமோஷனலான படம் இது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் தயாரித்தவர். முதல் முறையாக எனது குடும்பத்தில் வெளியே ஒரு நடிகரை வைத்து படம் பண்ணுகிறேன். இந்த படம் எனக்கு பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் இந்த படத்தை ஹிட்டாக்க பல்வேறு விதமாக யோசித்தேன்.

அப்போது சிவா என்னிடம், இந்த படத்தில் டாஸ்மாக், குடிப்பது போன்ற காட்சி, பெண்களை திட்டுவது போன்ற பாடல்கள் இவையில்லாமல் ஒரு குடும்ப படமாக பண்ணலாம் என்றார். படம் ஆரம்பிக்கும் போது இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எனது எண்ணத்தில் இருந்தது. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

முதல்முறையாக சந்தானம் இல்லாமல் படம் பண்ணுகிறேன். இருப்பினும் இந்த படத்தில் நான்கு முன்னணி காமெடியன்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரம் இல்லை. சிவாவுக்கு சமமான கதாபாத்திரம், அதை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்.