ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சக்கள் மீதான கொலைச் சதி விசாரணைகளை குற்றவியல் விசாரணைகளில்

நிபுணத்துவம் பெற்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அறியமுடிகிறது.

இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசித்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, ‘கூட்டு அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைச்சராகக் கடமையாற்றிய ரஞ்சித் மத்தும பண்டாரவின் மீது நம்பிக்கையில்லை. தேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக தகுதியான ஒருவரை நியமிப்பேன்’ என்று ஐக்கிய தேசிய முன்னிணியின் குழுவினரிடம் முகத்தில் அடித்தால்போல் கூறினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய முன்னணியின் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த வாரம் சந்தித்தது. இந்தச் சந்திப்பில் ரஞ்சித் மத்துமபண்டாரவும் பங்கேற்றார்.

பொலிஸ் அதிகாரத்தை நான் பொறுப்பேற்ற பின்னர் என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் தொடர்பான விசாரணைகள் சிறப்பாக இடம்பெறுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விசாரணைகள் உரிய விதத்தில் இடம்பெறவேண்டும் என நான் தெரிவித்து வந்துள்ளேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித்மத்து பண்டார, நான் விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ளார்

அவரது கருத்தால் சீற்றமடைந்த மைத்திரிபால சிறிசேன, ‘முன்னைய அரசின் போது விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை.

சட்டம் ஒழுங்கு அமைச்சிற்கு பதில் பிரதமர் அலுவலகமே விசாரணைகளைக் கையாண்டது.

முன்னரும் நீங்கள் இந்த சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்தீர்கள். அப்போது உங்கள் வேலையை நீங்கள் செய்தீர்களா

இல்லையே? பிரதமர் அலுவலகமே அதனை செய்தது’ என்று மத்தும பண்டாரவுக்குக்குப் பதிலளித்தார்.

தேவைப்பட்டால் நான் தகுதிவாய்ந்த ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தகவல் வழங்குனரான நாமல் குமார வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்சாக்கள் மீதான கொலைச் சதி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.