மொட்டு’ ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாம்

இலங்கைப் பொதுஜன பெரமுனவின், அதிபர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

‘உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பொதுஜன பெரமுன 5 மில்லியன் வாக்குகளையும், சுதந்திரக் கட்சி 1.4 மில்லியன் வாக்குகளையும் பெற்றன. ஐக்கிய தேசியக் கட்சி 3.4 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றது.

எனவே, பொதுஜன பெரமுன அற்பமான கட்சி அல்ல. அது ஒரு வலுவான, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி, டிஜிட்டல் தளங்களில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

ஆசிய பிராந்தியத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில், பொதுஜன பெரமுன உள்ளது என்று பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்த செல்வாக்கின் அளவைக் கொண்டு, இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் உரிமை பொதுஜன பெரமுனவுக்கே உள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் நியமனம் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவுடன், 2 மணி நேர கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அது அனைவருக்கும் சாதகமாக முடிந்தது என இருவரும் தெரிவித்தனர்.’ என்றும் அவர் கூறினார்.