இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொண்டதில் சாரதி காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

யாழ். ஆலடி சந்தியில் வைத்து குறித்த தாக்குதல் நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

வசாவிளான் பகுதியில் இருந்து யாழ்.நகர் நோக்கி பயணித்துக்கொண்டு இருந்த இ.போ.ச பேருந்தினை பின்னால் வந்த தனியார் பேருந்து ஆலடி சந்தியில் முந்தி சென்று பேருந்தினை மறித்து , அதன் நடத்துனர் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். குறித்த தாக்குதலில் சாரதி காயமடைந்துள்ளார்.

அதேவேளை இரண்டு பேருந்துக்களும் போட்டி போட்டு ஓடி வந்தது எனவும் , அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே சாரதி தாக்கப்பட்டார் எனவும் அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர்.

அத்துடன் பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிர்களை பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனை நிறுத்த உரிய தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.