யாழ் குருநகரில் சட்டவிரோதமாக வெட்டிய 97 கிலோ மாட்டிறைச்சியுடன்  முஸ்லிம் நபர் கைது

அனுமதி பெறப்படாமல் மாட்டிறைச்சி வெட்டியமை மற்றும் அதனை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விடுத்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட 97 கிலோ கிராம் இறைச்சியை தீயிட்டு அழிக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்ற நாவந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதாரத் துறையினரால் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 97 கிலோ கிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது.

சுகாதாரத் துறையினரின் அனுமதி பெறப்படாமல் மாட்டை வெட்டி அதன் இறைச்சியை விற்பனைக்காக எடுத்துச் சென்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர், யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுக்க உத்தரவிட்டார்.

அத்துடன், முச்சக்கர வண்டியை தடுத்துவைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட 97 கிலோ கிராம் மாட்டிறைச்சியையும் தீயிட்டு எரித்து அழிக்க பொதுச் சுகாதாரப் பிரிவினருக்கு கட்டளையிட்டார்.

சந்தேகநபரைக் கைது செய்யும் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் மாநகர பிரதி முதல்வர் துரைராஜா ஈசனும் சுகாதாரத் துறையினருடன் இருந்தார்.