யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவி விலக்கம் ;கூட்டமைப்புக்கு செருப்படி?

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து தூக்கியமை, தனக்கு எதிராகக் கோஷம் எழுப்பும் கூட்டமைப்பைப் பழிவாங்கவே, என்று முணுமுணுக்கின்றன பல்கலைக்கழக வட்டாரங்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் விக்னேஸ்வரனை உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுமாறு அறிவித்திருக்கின்றார். இது ஒன்றும் மைத்திரிக்குப் புதிது அல்ல, இதற்கு முன் பிரதமரில் இருந்து இப்போது பாதுகாப்பு அமைச்சர் வரை இது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் எல்லாவற்றிற்கும் பதவி விலக்கப்படுபவர் நிர்வாகத் ”திராணியற்றவர் ” என்ற சொல்லின் கீழேயே மைத்திரி கொண்டு வந்து அடக்குகின்றமைதான் வழமை. ஆனால்  யாழ். பல்கலை துணை வேந்தர் விடயத்தில் எந்தவொரு விளக்கமும் விடுக்கவில்லை அவர். ஆனால் அந்த திராணியற்றவர் என்ற கோட்பாட்டின் கீழ்தான் என்று, பல்கலைக்கழக வட்டாரங்கள் புசுபுசுக்கின்றன.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்களின் சட்டவிதிப்படி துணைவேந்தரை பதவியிழக்க செய்ய ஜனாதிபதிக்கு உரிமை இருக்கின்றது என்கின்றது அந்த சட்டம். ஆகையால் மைத்திரியின் செயற்பாடு சட்டத்துக்கு உட்பட்டதே.

இக்கட்டான சூழ்நிலைக்குள் மைத்திரியின் திட்டம் என்ன?

‘யாழ்.பல்கலைக்குள் இதுவரை , ஏன்? புலிகள் காலத்தில் கூட நுழையாத ராணுவம் இப்போது நுழைந்திருக்கின்றது. என்ற போதே சில விடயங்களை ஊகித்திருக்கவேண்டும் கூட்டமைப்பு.

பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் தான் எதையும் வழிநடத்திக்கொண்டு இருப்பார்கள். இப்போது பல்கலைக்கழக துணைவேந்தரை மாற்றம் தொடர்பாக தலையிட்டால் மாணவர்கள் பொங்கியெழுவார்கள். ஆனால் இப்போது அவசரகாலத் தடைச்சட்டத்துக்குள் கைதுகள், பதவி விலக்கல் என்பது சாணக்கியமாக காய் நாகர்தலின் ஒரு பக்கம் என்பது, வெள்ளிடைமலையாக தெரிகின்றது’ என்கின்றனர் பல்கலைப் பேராசிரியர்கள் சிலர்.

‘அத்துடன் இப்போது அரசுக்கு எதிராகப்போர் கொடி காட்டிக் கொண்டு இருக்கின்றது கூட்டமைப்பு. ஆகையால்; பழிவாங்கலிற்காக “இறங்கித் தாக்கவும் தான் தயார்” என்று மைத்திரி காட்டியிருக்கின்றார் ‘ என்கின்றனர் அவர்கள்.

இனி என்ன நடக்கப்போகின்றது?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவின் சட்டவிதிப்படி, துணைவேந்தராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் , அவருடைய பதவிக்காலம் முடியும் வரை இன்னொருவரை துணை வேந்தராக நியமிக்க முடியாது. ஆனால் அதற்குத் தகுதியான ஒருவரை நிர்வாக அதிகாரியாக நியமிக்கலாம்.

இப்போது யாழ்.துணைவேந்தரின் இடத்தை நிரப்ப, துணைவேந்தர் தேர்தலில் அதிக வாக்குப் பெற்று துணைவேந்தர் ஆகாமல் போன பேராசிரியர் எஸ்.சற்குணராசா நியமிக்கப்படலாம் அல்லது முன்னாள் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் நியமிக்கப்படுவற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

இதை விட இன்னொருவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது என்று பொருமுகின்றார் கூட்டமைப்பு உறுப்பினர்.

வடக்கு ஆளுநர் நியமனம் எப்படியோ? அப்படி!.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின் போது நியமிக்கப்பட்ட பேராசிரியர் உமா குமாரியின் பெயர்தான் அது.

விக்னேஸ்வரன் ஏன் நீக்கப்பட்டார்?

துணைவேந்தர் மாற்றத்திற்கு அரசியல் என்று குசுகுசுக்கப்பட்டாலும் , அவரின் நிர்வாகத் திராணியற்ற தன்மைதான் என்பதை முன்னைய கால சில சம்பவங்கள் சந்தேகப்படவைக்கின்றன.

பல்கலைப் பேரவைகள் கூட்டம் ஒன்றின் போது, பேராசிரியர் வேல் நம்பியையும் துணைவேந்தரையும் பதவி விலகிச் சென்று விடுமாறு பல்கலைக்கழக வெளிவாரி உறுப்பினரான சட்டத்தரணி ஒருவர் கடுமையாகப் பேசியிருந்தார்

அதே போல சிங்கள பேராசிரியர் உயாங்கொட கூட பல்கலை நிர்வாகம் படுமோசம் என்று வெளிப்படையாகவே சாடியிருக்கின்றார். இவற்றைப் பல்கலைக்கழக வட்டாரங்களும் ஏற்றுக்கொள்ளாமல் இல்லை.

என்ன செய்யும் கூட்டமைப்பு?

கூட்டமைப்புக்கு வேறு வழி ஒன்றும் இல்லை. ஏற்கனவே சுமந்திரன் மைத்திரியை புட் போல்(Foot Ball)  ஆடிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில், மைத்திரிக்கு மிஸ் கோல் கூட அடிக்க முடியா நிலைதான் இப்போது சுமந்திரனுக்கு.

எது ? என்னவான இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் மிக விரைவில் யாழ். பல்கலை சீராக இயங்க வழி செய்வதே சிறப்பு!