நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளார்.

சற்றுமுன்னார் அதிபரின் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,

‘225 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று நான் முன்னர் கூறியது, எனது தனிப்பட்ட அரசியல் கருத்து. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இருந்த போதும், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்தே, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய போதும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழை வெளியிட முன்னரும், சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தேன்.

இந்த நடவடிக்கைகளால் நான் அரசியலமைப்பை மீறவில்லை. கடாபியுடன் ஒப்பிட்டு வெளியிடப்படும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.