ரொக்கெட் ஏவுதளத்தை வடகொரியா மறு சீரமைப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், கிம் ஜாங் அன் மீது டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வடகொரியா முழுமையாக நிறுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று முக்கிய அணு ஆயுத உலைகள், ஏவுகணை தளங்கள் உள்ளிட்டவற்றை சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் வடகொரியா இழுத்து மூடியது.

இருப்பினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. அதற்கு பிரதிபலனாக தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் நடந்த 2ஆவது உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இரு தரப்பினர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சு முடிவுக்கு வந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா இனி பேச்சுக்கள்; நடைபெற்றாலும், அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிவித்தது. அதே சமயம் வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரை அந்நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அழிக்கப்படும் என வடகொரியா உறுதி அளித்திருந்த முக்கிய ரொக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப் அதிருப்தி

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், ‘வடகொரியாவின் தளத்தில் பணிகள் நடைபெறுவதாக வெளியாகும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், நான் மிகவும் அதிருப்தி அடைவேன். அவ்வாறு நடக்காது என நினைக்கிறேன். ஆனால், என்ன நடக்கிறது என்பதை நாம் பார்போம்’ என்று தெரிவித்துள்ளார்.