வடக்கு- கிழக்கில் அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புப் பட்டிப் போராட்டம் – ஏனைய மாகாணங்களில் சுகயீன லீவு

வடக்கு, கிழக்கு உள்பட நாடு முழுவதிலும் அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.

நாடுமுழுவதிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதனால் வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஆசிரியர்களின் வருகை குறைவாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்தனர். அவர்கள் காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளிலும் அதிபர்கள், ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து , பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு முன்பாக காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறைந்த வேதனங்களோடு அதிபர்கள், ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர்கள்,அதிபர்களின் வேதனம் அதிகரிக்கப்படவேண்டும், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றவேண்டும், மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல்வேண்டும்’ ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.