வடமாகாணத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 14 ஆயிரம் பேர் டெங்கினால் பாதிப்பு

வடமாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 13ஆயிரத்து 606 பேர் டெங்கு நுளம்பினால் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எச்.என்.கசித்த டீ. சில்வா தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பருவகால மழைவீழ்ச்சி காரணமாக டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (08) வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எச்.என்.கசித்த டீ. சில்வா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், டெங்கு நுளம்பின் தாக்கம் என்பது படிப்படியாக அதிகாரித்து வருகின்ற ஒரு நிலையைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு 8ஆயிரத்து 563 பேரும்;, 2018 ஆம் ஆண்டு 5ஆயிரத்து 43 பேரும் இனங்காணப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு சுகநலத்துடன் அனுப்பப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் 449 பேரும்;, ஒக்டோபர் மாதத்தில் 680 பேரும்;, நவம்பர் மாதத்தில் 610 பேரும், டிசெம்பர் மாதத்தில் 1107 பேர்களும் இனங்கானப்பட்டுள்ளன எனவும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தேசிய டெங்கு நுளம்பின் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி எச்.என்.கசித்த டீ. சில்வா தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றும் நகர, பிரதேச, ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் நலன்களை மேம்படுத்தி அவர்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுற்றாடல்களை சுத்தமாக வைத்து பேணி பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையினை குறைப்பதற்காக விசேட சுகாதார குழுவினர்கள் ஒவ்வொரு கிழமையும் சுற்றாடல் பணியில் மேற்பார்வையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களை மீறும் பொதுமக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு லடசம் ரூபா தண்டப்பணமாக விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எ.சத்தியமூர்த்தி, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள உயர் அதிகாரிகள், வடமாகாண மாவட்ட செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிமார்கள் பலரும் கலந்துகொண்டனர்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது