நாடாளுமன்ற அரச கணக்காய்வுக் குழுவின் மதிப்பீட்டுக்கு அமைய வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என 12 துறைகளுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்குரிய தங்கப் பதக்கங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் வழங்கிவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017ஆம் ஆண்டுக்கான அரச அலுவலகங்கள், நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் 12 துறைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த 5ஆம் திகதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் நானாட்டான் பிரதேச சபைக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை ஊக்குவிக்கும் விதமாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று  (10) கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்களுக்கு தனது ஊக்குவிப்பு மற்றும் வாழ்த்துச் செய்தியினை வழங்கினார். மேலும், 2017 ஆம் ஆண்டில் வடமாகாண ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரே மற்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்டோரையும் ஆளுநர் இதன்போது பாராட்டினார்.