வவுனியா பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாக பயணிகளை ஏற்றுவதற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி

வவுனியா நகரிலுள்ள பழைய பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் அனைத்து பஸ்களும் மூன்று நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பொலிஸார் மற்றும் அதிகாரிகளைக்குப் பணித்துள்ளார்.

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து செல்ல வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அவரது அலுவலகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் இன்று (6) நடைபெற்றது.

இலங்கை போக்குவரத்துச் சபை , மாகாண போக்குவரத்து அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர் ,மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் வவுனியா, வவுனியா மூத்த பொலிஸ் அத்தியட்சகர், போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன

தூர பயணம் செய்யும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பஸ்கள் தரித்து செல்வதற்கு தனியான பஸ் தரிப்பிடமும் பிரதான வீதியில் பழைய பஸ் நிலையத்திற்கு அண்மையாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைகளுக்கான நேர அட்டவணை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை கண்காணிப்பதற்கு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபட வேண்டும்.

அனைத்து பேருந்துகளும் மூன்று நிமிடங்கள் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

ஆகிய மூன்று தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்த மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, பழைய பஸ் நிலையம் தொடர்பிலான விடயம் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணமாக அதன் தீர்ப்பின் பின்னராக அது தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

error: பிரதிமைப்படுத்தல் தடுக்கப்பட்டுள்ளது