கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விண்ணில் இருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது ஒரு பெரும் சவாலான விஷயம். ஏனெனில், நாம் தூக்கி எறியும் தனித் தனி குப்பைகள் மிக சிறய அளவில் இருக்கும் என்பதால் அதனை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடிப்பது கடினமாகும்.

ஆனால், தண்ணீரில் பிளாஸ்டிக்கின் ஒளி பிரதிபலிக்கும்போது இது சாத்தியமாகும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விஷயம் அணுகப்படுகிறது.

பிரிட்டனின் ப்ளைமவுத் கடல் ஆய்வகம் நடத்திய சோதனைகள் இதனை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

“ஒரு தனி பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் கடலில் மிதப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால், இந்த பொருட்களை ஒட்டுமொத்தமாக நாம் காண முடியும்” என்கிறார் பிபிசியிடம் பேசிய டாக்டர் லாரன் பியர்மன்.

பூமியை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் 2 செயற்கைக்கோள்கள், ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டன.

இதன் முதன்மையான நோக்கம் தொடர்ச்சியாக மாறிவரும் பூமியின் நிலப்பரப்புகளின் வரைபடங்களை உருவாக்குவது. அதே சமயத்தில் இது கடலோர பகுதிகளின் நிலையையும் படம்பிடிக்கிறது.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கண்காணிக்க வேண்டுமானால் கடலோரப் பகுதிகள்தான் சரியான இடம். ஏனெனில், ஆண்டு தோறும் கடலில் கடக்கும் எட்டு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்த இடத்தின் வழியாகதான், அதாவது நதிகள் மற்றும் முகத்துவாரங்கள் வழியாகதான் கடலில் சென்று சேர்கின்றன.

சென்டினல் செயற்கைக்கோள்கள் பிரிட்டனில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த மண்டலங்களை படம் பிடிக்கும்.

ஆனால் இதில் ஒரு சவால் இருப்பதாக பியர்மன் கூறுகிறார். செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்கள் 10 மெகா பிக்ஸல் ரெசல்யூஷனில் இருக்க, ஒவ்வொரு பிக்சலும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் பொருட்களை நாம் சரியாக கண்டறிய முடியும்.

ஆனால், அவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இரு காரணிகளை அவர் வைத்திருக்கிறார்.

ஒன்று, நதிகள் சென்று கடலில் சேரும் இடத்தில்தான், மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒன்றாக சேரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் அது செடிகொடிகளாக இருக்கலாம், ஆனால், பிளாஸ்டிக் போன்ற மற்ற குப்பைகளும் இதில் அடங்கும்.

இரண்டாவது காரணி, சென்டினல் செயற்கைக்கோள்களில் உள்ள கண்டறியும் கருவிகளின் தரம் இதற்கு சாதமாக அமைகிறது.

ஒவ்வொரு பொருளும் ஒளியை உண்டாக்கும் மாறுபட்ட அலைவரிசைகளை துள்ளியமாக இதனால் கண்டுபிடிக்க முடியும். இதுதரும் புகைப்படங்களின் பிக்சல்களை வைத்து அது என்ன பொருள் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று ப்ளைமவுத் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.