விமான கழிவறையில் தனது குழந்தைக்காக தாய்ப்பாலை பாட்டிலில் பம்ப் செய்ததாக நடிகை சோஹா அலி கான் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பொது இடங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.

இந்நிலையில் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை பிரபலங்கள் ஊக்குவிக்கத் துவங்கியுள்ளனர். பொலிவுட் நடிகை சோஹா அலி கான் இது குறித்து சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

முதல் முறையாக தாயாகியுள்ளது மிகவும் சவாலாக உள்ளது. என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை பெற்ற பிறகும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது வினோதமான இடங்களில் எல்லாம் தாய்ப்பாலை  போத்தலில் பம்ப் செய்துள்ளேன்.

விமான கழிவறையில் தாய்ப்பாலை போத்தலில் பம்ப் செய்திருக்கிறேன். சீட்பெல்ட் போடுமாறு அறிவிப்பு வெளியானதும் அவசர அவசரமாக இருக்கைக்கு ஓடி வந்திருக்கிறேன்.

அவ்வாறு ஓடி வந்தபோது விலை மதிப்பில்லா தாய்ப்பால் வலி நெடுகிலும் சிந்தியுள்ளது. நான் வந்து இருக்கையில் அமர்ந்ததும் மேக்கப் போட சென்றீர்களா என்று விமான பணிப்பெண் கேட்டார். அதற்கு நான் இல்லை என்று பதில் அளித்தேன்.

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுத்தால் கேவலமாக பார்க்கிறார்கள். ஆனால் இந்த மனநிலை மாற வேண்டும். பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை தடுக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும்.

தாய்மையின் சவால்களை நான் மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை. என்னை போன்று நிறைய தாய்மார்களும் அதே சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் சோஹா.

வெளிநாடுகளில் தாய்ப்பால் கொடுத்தால் யாரும் அந்த பெண்ணை வித்தியாசமாக பார்ப்பது இல்லை. இந்தியாவில் எந்த பெண்ணாவது பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்தால் அவர் தாய் என்பதை மறந்து அவரின் மார்பகங்களை பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.