வீதியோரம் நின்று திருநங்கைகளை அழைத்தவர்களுக்கு நடந்தது என்ன?

திருநங்கைகளை பாலியலுக்கு அழைத்ததாக 100 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.

அதன்படி, ஒரு சில திருநங்கைகள், நுங்கம்பாக்கம் சாலைகளின் இருபுறமும் இரவு நேரங்களில் வரிசை கட்டி நிற்பது வாடிக்கையாகி வருகிறது. அத்தகைய சமயங்களில் அவ்வழியாக கார், பைக்கில் போகிறவர்களை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி அழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன.

இந்த திருநங்கைகளில் பெரும்பாலானோர் நன்றாக படித்தவர்கள். திறமை வாய்ந்தவர்கள். படிப்பு என்றால் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். இவர்களில் என்ஜினியரிங், எம்பிஏ, படித்தவர்கள் எல்லாம் உண்டு. ஆனால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை தர யாரும் முன்வராத காரணத்தினால் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை மாநகர காவல்துறைக்கு இது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனை கட்டுப்படுத்த சென்னை நகர காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தலாம் என்றும், அந்த ஆலோசனை கூட்டத்தில் திருநங்கைகளை அழைத்து பேசலாம் எனவும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டது. அதன்படி இதற்கான கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சுமார் என்ஜினியரிங், எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, பிஎஸ்சி டிப்ளமோ படிப்புகளை படித்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

அப்போது போலீசார், “இனிமேல் சாலையோரம் நின்றுகொண்டு யாரையும் பாலியல் தொழிலுக்கு அழைக்க கூடாது என்றனர். மீறி நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்தனர். வேண்டுமானால் இந்த தொழிலுக்கு மாற்றாக ஓட்டல்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து திருநங்கைகளும் அதனை பரிசீலிப்பதாக சொன்னார்கள். ஆனாலும் இதனை திருநங்கைகள் கேட்கவே இல்லை. திரும்பவும் பழைய மாதிரியே இரவு நேரங்களில் சாலையோரம் நின்று வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் போலீசார் அதிரடியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

திருநங்கைகளிடம் பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர். அந்த வகையில் பேச்சுவார்த்தை நடத்தி திருநங்கைகளின் ஒத்துழைப்பு கிடைக்காத இந்த 4 மாதத்தில் மட்டும் 100 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.