பாக்கு நீரினை சந்தியை பத்து மணிநேரத்தில் நீந்தி கடந்த, தமிழக சிறுவனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் – தாரணி தம்பதியினரின் மகன் ஜஸ்வந்த். இவருக்கு வயது 10. குறித்த சிறுவன், தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாவட்டம், மாநிலம் என பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதங்களை வென்றுள்ளார்.

அத்தோடு, 2017ம் ஆண்டு தன்னுடைய 8 வயதில் தொடர்ந்து 81 நிமிடம் நீந்தி உலகசாதனை படைத்தார். இந்நிலையில் குற்றாலீசுவரனை போல பாக்கு நீரினை சந்தியை கடந்து சாதனை படைக்க விரும்பியுள்ளார். அதற்கான சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்ட ஜஸ்வந்த், தன்னுடைய பயிற்சியாளர், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருடன் புதன்கிழமையன்று தலைமன்னார் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து வியாழக்கிழமை(28.03.2019) அதிகாலை 4 மணிக்கு நீந்த துவங்கிய ஜஸ்வந்த், 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியின் அரிச்சல் முனையை, பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்துள்ளார்.

இதன்மூலம் கடந்த 1994ம் ஆண்டு பாக்கு நீரினை சந்தியை 16 மணி நேரத்தில் கடந்த குற்றாலீசுவரனின் சாதனை முறியடிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

பின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்தடைந்த ஜெஸ்வந்திற்கு இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சாதனை படைத்திருக்கும் சிறுவனுக்கு அரசு அதிகாரிகள், தலைவர்கள் துவங்கி பொதுமக்கள் பலரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.