5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜேர்மனியில் சோதனை வெற்றி

5 இருக்கைகளை கொண்ட, மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜேர்மனியை சேர்ந்த ஏர் ரக்சி (AIR TAXI) நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர் ரக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஜேர்மனியை சேர்ந்த ஏர் ரக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயற்;பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, மின்கலம் மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ‘ரிமோர்ட் கொண்ட்ரோல்’ மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மின்கலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீற்றர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.