750 கிலோ வெங்காயம் 1064 ரூபாய்: விரக்தியில் பணத்தை மோடிக்கு அனுப்பிய விவசாயி

இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தில் 50 வீதத்தை மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் அங்குள்ள நிபாட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயி சஞ்சய் சாத்தே வெங்காயத்தின் விலை குறைந்ததால் வேதனை அடைந்து பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

கடந்த வாரம் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஒரு கிலோ வெங்காயத்தை ரூ. 1க்கு கொள்முதல் செய்ய அங்கு முன்வந்திருக்கிறார்கள். பேச்சுக்குப் பிறகு 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ 1064 விவசாயி சஞ்சய்க்கு கிடைத்துள்ளது. அதாவது ஒரு கிலோ சுமார் ரூ1.40.

விலை குறைவாக கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த சஞ்சய் சாத்தே, அப்பணத்தை பிரதமர் மோதியின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார் .

நான்கு மாத வியர்வை சிந்திய உழைப்புக்கு கிடைத்த விலை தமக்கு வேதனை அளிப்பதாகவும் அதனால் இப்பணத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும் இதற்கு மணி ஓடர் கமிஷனுக்கு ரூ.54 கூடுதலாக செலவு செய்துள்ளேன் என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ஒபாமாவுடன் உரையாடுவதற்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளில் சஞ்சயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது